இறந்துபோன புண்ணிய புருஷராகிய மேற்படி பச்சையப்ப முதலியார் அவர்களால் வைக்கப்பட்டிருக்கும் லட்சம் வராகனுக்கு வரப்பட்ட வட்டிப் பணத்தினின்னும் ஆவுடையார்கோயிலில் சாயர¨க்ஷ கட்டளைத் தர்மமானது. கனம் பொருந்திய சுப்ரீம் கோர்ட் கவர்ன்மெண்டு அதிகாரிகளால் தர்ம விசாரணைக் கர்த்தர்களாக நியமிக்கப்பட்டுச் சென்னப்பட்டினத்திலிருக்கும் இந்து சபையாரவர்களுடைய உத்திரவின்படி சாலிவாகன சகாப்தம் 1764-ஆம் வருஷத்து சரியான சுபகிருது முதல் வருஷம் கறாளஉய 120 வராகன் செலவுள்ளதாக நடந்து வருகின்றது. மேற்படி மூலதனம் சுப்ரீம் கோர்ட்டு அதிகாரிகளுடைய உத்திரவின்படி சென்னப் பட்டணத்திலிருக்கும் ஜெனரல் திரேசரி (General Treasury) என்னும் கவர்மெண்டாருடைய பொக்கிஷத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. மேற்படி தர்மம் கிரமமாக நடவாவிட்டால் தர்மத்தில் சிரத்தையுள்ளவர் மேற்படி சபையாரவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது. இக்கோயிலில் கலாத்வா, தத்துவாத்வா, புவனாத்வா, வர்ணாத்வா, பதாத்வா, மந்திராத்வா முதலிய ஆறு ஆத்வாக்களைக் குறிக்கும் வகையில் ஆறு வாயில்கள் - ஆறுசபைகள் உள்ளன. அவை 1) கனகசபை, 2) நடனசபை, 3) தேவசபை, 4) சத்சபை, 5) சித்சபை, 6) ஆநந்த சபை என்றழைக்கப்படுகின்றன. கனகசபை - 81 தீபங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நர்த்தனசபை (நடன/நிருத்தசபை) - பதஞ்சலி வியாக்ரபாதர்கள் பெருமானிடம் கருணையை வேண்டிப் பெற்ற இடம் 224 புவன தீபங்களையுடையது. தேவசபை - சூரனிடம் பயந்த தேவர்கள் தவஞ்செய்த இடமாகச் சொல்லப்படுவது; இதை சுந்தரபாண்டிய மண்டபம் என்பர். இங்கு ஏகாதச மந்திரங்கள் 11 தீபங்களாக உள்ளன. சத்சபையில் 36 எண்ணுடைய தத்துவத் தீபங்கள் பிரகாசிக்கின்றன. சித்சபையில் அகர முதலான 51 எண்ணுடைய தீபங்கள் திகழ்கின்றன. ஆநந்தசபையில் (கருவறை) பஞ்ச கலைகள் என்னும் சுடர் பிரகாசிக்கிறது. இவ்வாறு இத்திருக்கோயிலில் தத்துவம் அனைத்தும் தீப வடிவங்களாகவே வைத்துக் காட்டப்பட்டுள்ளன.